மசினக்குடி மக்கள் மீது அவதூறு: டிக்-டாக் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!
காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மசினகுடி மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட டிக் டாக் சூர்யா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்த காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் பேசுபொருளாக மாறிய இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த டிக்-டாக் சூர்யா என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மசினகுடி பகுதி மக்களை கொச்சையாக பேசியவர், அந்த ஊருக்கு போக்குவரத்து, பால், குடிநீர் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என பேசி இருந்தார்.
அதேபோல மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. இந்த வீடியோவை பார்த்த மசனகுடி பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவனல்ல பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் செய்த செயலுக்கு ஒட்டு மொத்தமாக மசனகுடி பகுதி மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய சூர்யாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடைய மசினகுடி ஊர் மக்கள் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மசனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.