தென்மேற்கு பருவமழை சராசரியைவிடக் குறையும் : தனியார் வானிலை மையம்
எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான SKYMET தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மூலமே இந்தியாவுக்கு பெருமளவில் மழைப்பொழிவு கிடைத்து வரும் நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவில் இருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான SKYMET அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன், ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சராசரி மழை பொழிவு இருக்கக் கூடும் என SKYMET தலைமை நிர்வாக அதிகாரி ஜத்தின் சிங் தெரிவித்துள்ளார். சராசரி 97 சதவிதமாக பெய்து வரும் பருவமழை, சுமார் 93 சதவிகிதமாக குறைந்து காணப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சராசரியை விட குறைவாக இருக்க காரணம் எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் தான் என SKYMET நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் முழு காலங்களில் சராசரியாக சுமார் 93 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பசிபிக் பெருங்கடலில் சராசரியை விட கூடுதலான வெப்பநிலை காணப்படுவதால் எல் நினோ உருவாக வாய்ப்புள்ளதாகவும் SKYMET தெரிவித்துள்ளது.மேலும் ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் எனவும் SKYMET கணித்துள்ளது. இதனால் இந்த வருடம் விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு தண்ணீர் பற்றக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.