புதிதாக கட்டப்படும் வீடு
புதிதாக கட்டப்படும் வீடுpt web

மயிலாடுதுறை: புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக் கூடு

சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் புடவை சுற்றிய நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் - ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த செம்பதனிருப்பு அருகே நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பந்து புதிதாக கட்டப்பட்ட வீட்டினுள் விழுந்துள்ளது. சிறுவர்கள் பந்தை தேடி புதிய வீட்டிற்கு சென்ற பொழுது அங்கு கழிவு நீர் தொட்டியில் பார்த்துள்ளனர்.

அப்போது அதில் எலும்புக்கூடுகளை கண்டு அச்சம் அடைந்து கிராம மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராமமக்கள் சம்பவம் குறித்து பாகசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அதன் அடிப்படையில் இறந்தது யார்? தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு எங்கேயும் கொலை செய்யப்பட்டு எலும்புக்கூடு இங்கு வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் பாகசாலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவறையில் பெண்ணின் எலும்புக்கூடுகள் கிடக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com