திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு - சிறைபிடித்த மக்கள்.. நடந்தது என்ன?
திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ்-ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 19 வயதில் சஞ்சய் என்ற மகனும் 8 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் இருந்தனர். ஜெயராஜ் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மூத்த மகன் சஞ்சய் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரக்கூடிய நிலையில் திவ்யதர்ஷினி விஜயாபுரம் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் சென்ற திவ்யதர்ஷினியை வழக்கம்போல தாய் ராஜேஸ்வரி இன்று மாலை அழைத்து வந்து கொண்டிருந்தபோது நல்லூர் காவல் நிலையம் அடுத்த நல்லிகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ராஜேஸ்வரி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த நல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியதில் திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜேஸ்வரி காலில் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவத்தை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காவல் வாகனத்தை சிறைப்படுத்தினர். அப்போது காவல் வாகனத்தில் இருந்த ஊர் காவல் படையைச் சேர்ந்த காவலர் வீர சின்னன் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் வீர சின்னனை மீட்டு அருகில் உள்ள ஏடிஎம் அலுவலகத்தில் அருகில் பாதுகாப்புடன் அமர வைத்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு காரணமான காவலரை காவல்துறையினர் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் திருப்பூர்-காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்களின் மறியல் போராட்டம் தொடர்ந்ததன் காரணமாக திருப்பூர் காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் தரப்பில் காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாகவும், அவர் மீது மது போதையில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், முதல் தகவல் அறிக்கையை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
பொதுமக்களிடம் பேசிய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பிரச்சனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயராஜ்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகன் சஞ்சய் இது குறித்து தெரிவிக்கும் போது, "நான் கல்லூரியில் இருந்து வரும்போது சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். ஆனால் தங்கையின் உடலை இதுவரை எனக்கு காட்டவில்லை. என் தாய்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தந்தையும் துபாயில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறேன். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பேட்டி அளித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பேக்கை பிடிக்க ராஜேஸ்வரியும், திவ்யதர்ஷினியும் முயற்சித்த போது தவறி விழுந்துவிட்டதாகவும், அப்போது பின்னால் வந்த வாகனம் திடீரென பிரேக் பிடிக்க முயற்சித்தும் சிறுமி திவ்யதர்ஷினி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். அதனால் தான் அவர்கள் வந்த வாகனத்தில் பெரிதளவு சேதமில்லை எனவும் கூறியுள்ளனர். இருப்பினும் விபத்து குறுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னரே முழுத் தகவல் தெரியவரும் என்றனர்.