கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் தற்கொலை

கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் தற்கொலை

கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் தற்கொலை
Published on


மதுரையில் கடன்தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை வண்டியூரை அடுத்த சவுராஷ்டிரா புரத்தில் வசித்து வந்த சகோதரர்களான வேல்முருகன் - குறிஞ்சி குமரன் ஆகிய இருவரும் ஜெயம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்தி வந்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்துள்ளனர். தாங்கள் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தை விரிவாக்கம் செய்வதற்காக நூற்றுக்கணக்கானோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி முறைப்படி வட்டித் தொகையை வழங்கி வந்துள்ளனர். 

வேல்முருகன் - குறிஞ்சி குமரன் சகோதரர்கள் தொழில்களில் முதலீடு செய்த பணம் முடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள், சீட்டு கட்டியவர்கள் தங்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வேல்முருகன் - குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் 8 பேர் பாலில் விஷத்தை கலந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் வேல்முருகன், குறிஞ்சிகுமரன், அவர்களின் தாய் ஜெகஜோதி, மகள்கள் தாரணி, ஜெயசக்தி ஆகிய 5 பேர் வீட்டிலேயே உயிரிழந்தனர். 

வேல்முருகனின் மனைவி தேவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறிஞ்சிகுமரனின் மனைவி தங்கசெல்வி, மகள் மோனிகா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சம்பவத்தின் போது வீட்டில் இல்லாததால் வேல்முருகனின் மகன் ப்ரவின் உயிர் தப்பியுள்ளார். அவர் விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பயின்று வருகிறார். 

இந்த நிலையில் வேல்முருகன் - குறிஞ்சிகுமரன் குடும்பத்தினர் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம் கிடைத்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் தற்போதைய சூழலில் சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் சொத்துகளை விற்று பணத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com