\
Chennai Metro Update: 6 Stations Between Vadapalani and Porur Delayed
Six Chennai Metro Stations Between Vadapalani and Porur May Open Only by June 2027ANI

வடபழனி - போரூர் மெட்ரோ.. 6 மெட்ரோ நிலையங்கள் எப்போது திறப்பு? 2027 ஜூன் வரை காத்திருக்க வேண்டுமா?

வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் தற்போது சீராக இயங்கி வருகிறது. ஆனால், வடபழனி-போரூர் இடையிலான 6 மெட்ரோ நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதற்காக 2027 ஜூன் வரை காத்திருக்க வேண்டுமா? விரிவாகப் பார்க்கலாம்.
Published on: 

வடபழனி-போரூர் இடையே அமையும் 6 மெட்ரோ நிலையங்களின் பணிகள் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை பயணிகள் பயன்பாட்டுக்கு வர ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை ஆகலாம் என CMRL தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் நான்காவது வழித்தடத்தில், வடபழனி-பூந்தமல்லி புறவழிச்சாலை இடையிலான 14.64 கி.மீ. தூர சேவை கடந்த அக்டோபர் 11 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் தடத்தில் 17 நிலையங்கள் உள்ளன. ஆனால் தொடக்கத்தில் 11 மட்டுமே பயணிகளுக்குத் திறக்கப்பட்டன.

வடபழனி-போரூர் இடையே உள்ள ஆலப்பாக்கம் சந்திப்பு, கரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையாததால், அவை திறக்கப்படவில்லை.

இந்த நிலையங்களின் நுழைவு வாயில்கள், வெளிப்புறக் கட்டமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிவில் கட்டுமானப் பணிகள் 2027 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ரயில்களைத் தானியங்கி முறையில் இயக்குவதற்கான சோதனைகளும், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் (CMRS) அனுமதியும் கிடைத்த பிறகே நிலையங்கள் திறக்கப்படும். தற்போது ரயில்கள் தானியங்கி இயக்க முறைக்கு (Automatic Train Operation, ATO) மாற்றப்பட்டு வருகின்றன. முழுமையான ஆளில்லா ரயில் இயக்க முறைக்கு (Unattended Train Operation, UTO) 2027 ஜூன் அல்லது ஜூலைக்குள் மாறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் இல்லாததால் பாதிக்கப்படுவோர் ஆலப்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதி மக்கள். அவர்கள் தற்போது பேருந்து, ஆட்டோ போன்றவற்றையே சார்ந்துள்ளனர். இந்த ஆறு நிலையங்களும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Chennai Metro Update: 6 Stations Between Vadapalani and Porur Delayed
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. மோடி, விஜய் இணைந்து தொடங்கி வைப்பு! பொதுமக்கள் எப்போது பயணிக்கலாம்?