குலசேகரப்பட்டினம் | வரப்போகிறது புதிய ராக்கெட் ஏவுதளம்... முக்கியத்துவம் பெறப்போகும் சிவகாசி!

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் தமிழ்நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.
ராக்கெட் ஏவுதளம்
ராக்கெட் ஏவுதளம்pt web

செய்தியாளர் - பாலவெற்றிவேல்

குலசேகரபட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், இனி அங்கு ஏவப்படும் ராக்கெட்டுக்கான திட எரிபொருளை சிவகாசியில் இருந்து பெற முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பேராசிரியர் மற்றும் விஞ்ஞானியான த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து நம்மிடையே கூறுகையில்,

“Fall Satellite Launch Vehicleல் நாம் பயன்படுத்தும் எரிபொருள் திட எரிபொருள்கள் எனப்படும். பட்டாசுத் தொழிற்சாலையில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்கள்தான் இந்த திட எரிபொருள்கள். ஆக, சிவகாசி போன்ற பகுதிகளில் இருக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் சில தொழில்நுட்ப விஷயங்களை புகுத்தி, இந்த விண்வெளி பூங்காவிற்கு தேவைப்படும் திட எரிபொருள்களை நம்மால் தயாரிக்க முடியும்.

எனில் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை மற்றும் அத்தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகள் எழுகிறதுதானே... கவலையே வேண்டாம். அந்த தொழிற்சாலைகளுக்கும் இந்த விண்வெளி பூங்காக்களிற்கும் தொடர்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு நமக்கு இப்போது கிடைத்துள்ளது. ஆம், திட எரிபொருள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவரும் தொழிற்சாலைகள் புதிய பார்வையில் இயங்குவதற்கான வாய்ப்பை இந்த விண்வெளிப் பூங்கா அளிக்கும்.

எஸ்எஸ்எல்வியில் எரிபொருள் அனைத்தையும் ஸ்டார்ட் அப், தொழில் முனைவோர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையை வைத்துள்ளார்கள். ஆக இஸ்ரோவே எரிபொருளை தயாரிக்கப்போவதில்லை. அதன் வேதி விஷயங்களில் வேண்டுமானால் இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ளலாம். ஆனால் உற்பத்தி செய்வதில் தனியாரை பயன்படுத்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்துள்ளார்கள். இதனால் பல தொழில்முனைவோர்கள் இதில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. பிரபல பட்டாசு நிறுவனம் இதில் முன்னணியில் இருக்கிறது என்பதும் சுவையான செய்தி. ஆகவே அங்குள்ள தொழிலாளர் நலனும் காக்கப்படும்” என்றார்.

சிவகாசிக்கும் குலசேகரபட்டினத்திற்கும் இனி என்ன தொடர்பு இருக்கப் போகிறது?

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. முதல் கட்டமாக எஸ் எஸ் எல் வி ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பும் அளவிற்கு அடுத்த இரண்டு வருடத்தில் முழு ராக்கெட் தளமும் கட்டி முடிக்கப்பட உள்ளது. வருடத்திற்கு சராசரியாக 24 ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்ப திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் ஏவுதளம், தென் தமிழ்நாட்டில் ஒரு பொருளாதார கேந்திரமாக விளங்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை மத்திய அரசு அறிவித்த உடனேயே தமிழக அரசின் சார்பில் 2000 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான திட்டம் வரையறை செய்யப்பட்டது. அதன்படி ராக்கெட்டுக்கான உதிரிப் பாகங்கள், இஞ்சின் வடிவமைப்பு, செயற்கைக்கோள் வடிவமைப்பு, சென்சார்கள் உருவாக்கம் போன்ற நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த பகுதியில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ராக்கெட்டுக்கான திட எரிபொருளை சிவகாசியில் இருந்து பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

பட்டாசுகளுக்கான வெடி மருந்துகள் சிவகாசியிலேயே உள்ள சில ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவகாசியில் மொத்தமாக 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில் அவற்றுக்குத் தேவையான வெடி மருந்து சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தே எடுத்து வரப்படுகிறது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்த பின், ராக்கெட்டுகளுக்கு தேவையான திட எரிபொருளை, சிவகாசியில் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவிக்கிறார். இதனால் பல நெருக்கடிகளை சந்தித்துவரும் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com