
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் கனிஷ்கர் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் இந்த ஆலையில், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பரிசோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட குடோனில் ஏராளமான பட்டாசுகள் தேக்கி வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, தற்போது தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் யார் என்ற விபரமும் உடனடியாகத் தெரியவில்லை.
விபத்து நடந்த அறை பெரிய அளவில் இருந்ததால், அதன் உள்ளே 15 தொழிலாளர்கள் வரை வேலை செய்துகொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதில் 10 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் ஆபத்தான முறையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறி வருவதால் பலியானவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது அறையின் முன்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் கூடுதலாக தொழிலாளர்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே விபத்து நடந்த இடத்தில் பதட்டமான சூழல் தொடர்கிறது.