பிரதமர் பேசி முடித்ததும் ஒலித்த சிவாஜி பாடல் வரிகள்.. NDA தலைவர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி முடித்தபின், நடிகர் சிவாஜியின் பாடல் வரிகள் ஒலிக்கப்பட்டது. இதனால் NDA தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த பாடல், கூட்டணியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவால் விளக்கப்பட்டது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறிவருகிறது. ஆளும் திமுக அவர்களின் கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், மறுமுனையில் இருக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீழ்த்தும் வேலைகளை செய்துவருகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுரையில் உள்ள மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. அதிமுக, பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மேடையில் திமுக அரசை விமர்சித்து பேசினார். மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும் என வலியுறுத்தினர்.
பிரதமர் பேசி முடித்தபிறகு ஒலித்த பாடல் வரிகள்..
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி முடித்த பிறகு, நடிகர் சிவாஜியின் பாடல் வரிகள் ஒலிக்கப்பட்டது. அதைக்கேட்ட NDA கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் பேசி முடித்ததும் “"ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு..! என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்..!” என்ற வரிகள் கேட்டது.
இந்நிலையில் இந்தப்பாடல் ஒலித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “பிரதமர் மோடி கணீர் கணீர் என பேசினார். திமுகவின் ஊழல்களை பற்றி பேசினார். நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். ஒரு கூட்டு கிளியாக பாடல் என்பது எல்லாம் ஒரு குடும்பம் என்பது போல என்பதற்காக போட்டோம்” என பதிலளித்துள்ளார்.

