எச்ஐவி தொற்றால் அவதிப்படும் இளம் பெண் - 8 ஆண்டுக்கு முன் நடந்த கொடுமை
சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இதுபோன்ற ஒரு புகார் வெளியானது. இதுபோன்ற அலட்சியத்தால் பாதிப்பு முதல்முறையல்ல என்பதை வெளிப்படுத்தும் அடுத்த சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.
2009 செப்டம்பர் மாதம் மூக்கில் அடிக்கடி ரத்தம் வெளிவரும் நோய்க்கு சிகிச்சை பெற தனியார் கிளினிக்கை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமி அணுகியுள்ளார். மூக்கில் ரத்தம் வருவதை சரிசெய்ய சிறியளவில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். அடிக்கடி ரத்தம் வெளியேறிய நிலையில், சிறுமிக்கு ரத்தம் குறைவாக இருப்பதால் ரத்தம் ஏற்ற வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது.
செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் சிறுமிக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு மூக்கில் ரத்தம் வருவதும் நிற்காததுடன் சில மாதங்களில் உடலில் புண்கள் ஏற்பட்டன. அதற்காக ரத்தப் பரிசோதனை செய்ததில் எச்ஐவி தொற்று இருப்பதாக தெரியவந்து குடும்பமே அதிர்ந்தது.
அதன்பிறகு, ரத்தக் கசிவு மற்றும் எச்ஐவி தொற்று தடுப்பு மாத்திரைகள் சாப்பிடத் தொடங்கிய நிலையில், மருந்து ஒவ்வாமையாலும் சிரமப்படுகிறார் இப்போது 22 வயது இளம்பெண்ணான அவர். எச்ஐவி பாதிப்புடன் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் படும்பாடு சொல்லிமாளாது என்று கூறும் இவர், அதிக ரத்தப் போக்கு பிரச்னைக்கு சிகிச்சை பெறச் சென்றால் சிலரது கேலியை சந்திக்க நேரிடுவதாகவும், மனமுடைந்து தற்கொலை எண்ணம் வருவதுடன், சிகிச்சையையும் நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார்.
யாரோ செய்த தவறுக்காக தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் மகளை பலமுறை காப்பாற்றி இருப்பினும் அவரைத் தேற்றுவது சவாலாக இருப்பாக கூறுகிறார் மாணவியின் தந்தை. நீதி கிடைக்க நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பரிசோதனைகளுக்கு பிறகே ரத்தம் வழங்கப்பட்டதாக தனியார் ரத்த வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை மறுக்கும் பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர், ரத்தம் கொடுத்தவர்களின் முகவரிகளை தரவில்லை என்கிறார்.