சிவகங்கை: காப்பீட்டு அட்டை பெற ஆட்சியர் அலுவலகம் வந்த கொரோனா நோயாளியால் பரபரப்பு
சிவகங்கையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவக் காப்பீட்டு பதிவிற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்புவனம் அருகே லாடனேந்தலை சேர்ந்த ராஜபிரபு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இருந்தால் இலவச சிகிச்சை அளிக்கப்படுமென மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து, நோயாளியின் உறவினர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டு அலுவலக பிரிவை அணுகியுள்ளனர். அப்போது, காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் நேரில் வர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளியை அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்சில் சிவகங்கை ஆட்சியரகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் பற்றி விசாரித்த ஆட்சியர் உள்ளே கொரோனா பாதித்தவர் இருப்பதை அறிந்து விசாரித்தார். காப்பீட்டு பிரிவு அலுவலர்களை கண்டித்த ஆட்சியர், நோயாளிகளின் தன்மை அறிந்து செயல்படுமாறு எச்சரித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.