மயிலாடுதுறை: கபடி போட்டிக்கு சென்ற திரும்பிய இருவருக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவின் (17),ஜஸ்வந்த் (20), காளிதாஸ் (24) ஆகிய மூவரும் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது.
இதில் கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளிதாஸ் (24) பலத்த காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய விசாரணையில், சின்னங்குடி பகுதியில் நடைபெற்று வரும் கபடி போட்டிக்கு சென்ற மூன்று பேரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.