எஸ்.டி.சோமசுந்தரம் முதல் ஓபிஎஸ்-இபிஎஸ் வரை... அதிமுக சந்தித்த பிளவுகள் - ஒரு பார்வை

எஸ்.டி.சோமசுந்தரம் முதல் ஓபிஎஸ்-இபிஎஸ் வரை... அதிமுக சந்தித்த பிளவுகள் - ஒரு பார்வை

எஸ்.டி.சோமசுந்தரம் முதல் ஓபிஎஸ்-இபிஎஸ் வரை... அதிமுக சந்தித்த பிளவுகள் - ஒரு பார்வை

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தற்போது வரை அதிமுகவில் 3 முறை மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலந்தொட்டே அக்கட்சியில் அவ்வப்போது குழப்பங்களும் பிளவுகளும் ஏற்பட்டதுண்டு. தற்போதைய சூழலில் அந்தக் காலகட்டங்களை திரும்பப் பார்க்கலாம்...

எஸ்.டி.சோமசுந்தரம்

அதிமுகவின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர், எஸ்.டி.சோமசுந்தரம். இவர்களது பிணைப்பு, சக கட்சிக்காரர்களுக்கு எரிச்சலை ஊட்டியதால் இருவரின் நட்பை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்கள் போட்ட தூபத்தால் 1984-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து எஸ்.டி.சோமசுந்தரத்தை நீக்கினார் எம்ஜிஆர். இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம், அதே ஆண்டில் நமது கழகம் என்ற பெயரில் புதிய கட்சி கண்டார். 1984 நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது, நமது கழகம். பின்னர் 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியபோது அவரது அழைப்பை ஏற்று எஸ்.டி.சோமசுந்தரம் தனது 'நமது கழகம்' கட்சியை அதிமுகவுடன் இணைத்தார்.

நாஞ்சில் கி.மனோகரன்

மற்றொருவர் நாஞ்சில் கி.மனோகரன். எம்ஜிஆர், 1972-இல் அதிமுகவைத் தொடங்கியபோது நாஞ்சில் மனோகரனும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 8 ஆண்டுகள் அதிமுகவில் இருந்த மனோகரன், எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் திமுகவில் இணைந்தார். மனோகரனின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதே அவர் அதிமுகவிருந்து விலகியதற்கு காரணம் என்ற பேச்சு அப்போது உண்டு.

நால்வர் அணி

இதற்கு பின்னர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தவர்கள் நான்கு பேர். அறிஞர் அண்ணாவால் நாவலர் என்றழைக்கப்பட்ட நெடுஞ்செழியன், க.இராசாராம், செ.அரங்கநாயகம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது நால்வர் அணி என்ற பிரிவை அவர்கள் உருவாக்கினர். அந்த நான்கு பேரையும் ஜெயலலிதா கடுஞ்சொற்களால் விமர்சித்தார்.

1995இல் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாசாரம் பற்றியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

ஜெயலலிதா

இவர்கள் அனைவரையும் விட கட்சியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர், ஜெயலலிதா. 1982ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த ஜெயலலிதா, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் கட்சி பிளவுபட்டபோது, தனி அணியாக செயல்பட்டார். எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் மற்றொரு அணி செயல்பட்டது. அப்போது 1989இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டன. இதில் ஜானகி அணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றதால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார்.

ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் ஜெயலலிதா 1991இல் முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தற்போது வரை அதிமுகவில் 3 முறை மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி: ‘வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பொதுக்குழு’ - தயாரான அரங்கம்; கடும் போலீஸ் பாதுகாப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com