சிம்கார்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டது எப்படி?- சிம் ஸ்வாப் மோசடியில் சூடுபிடிக்கும் விசாரணை

சிம்கார்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டது எப்படி?- சிம் ஸ்வாப் மோசடியில் சூடுபிடிக்கும் விசாரணை
சிம்கார்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டது எப்படி?- சிம் ஸ்வாப் மோசடியில் சூடுபிடிக்கும் விசாரணை

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிம் ஸ்வாப் எனப்படும் நூதன முறையில் மோசடி செய்து மருத்துவமனை நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 24  லட்சம் கொள்ளையடித்த மேற்கு வங்க கும்பல் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். 

தலைமறைவாக உள்ள கும்பல் தலைவன் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ் குறித்து பல்வேறு தகவல்களை 4 பேரிடமும் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். மோசடி செய்து திருடிய பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? இந்த மோசடியில் தலைமறைவாக இருப்பவர்கள் யார் யார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் 4 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் விரைந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4  பேரில், ஒருவருக்கு மட்டுமே இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது என்பது தெரிந்து ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மோசடி செய்யும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றி அதை ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தரகர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கும்பல் தலைவன் சதீஷ் என்பவர் யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் மற்றும் எத்தனை பேரை இந்த முறையில் மோசடி செய்துள்ளார் என்பது குறித்த தகவல்களை வாக்குமூலமாக பெற்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நேற்றிரவு 4 பேரையும் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் "SIM SWAP" மோசடியை தொடர்ந்து  தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் மண்டல அதிகாரியை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

இமெயில் மூலமாக எப்படி சிம்கார்டுகள் மாற்றி கொடுக்கப்படுகிறது? என்னென்ன நடைமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன இருக்கிறது? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் சிம் கார்டு நிறுவன மண்டல அதிகாரியை நேரில் அழைத்துள்ளனர். 

இந்த நூதன முறை மோசடியில் முக்கியமாக பார்க்கப்படும் சிம் ஸ்வாப் முறை குறித்து விளக்கம் கேட்பதற்கு, சம்பந்தப்பட்ட சிம்கார்டு மண்டல அதிகாரியிடம் விளக்கம் கேட்பதற்கு போலீசார் அழைத்துள்ளனர். குறிப்பாக முறையாக சோதனை செய்யாமல் சிம் கார்டு ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டது எவ்வாறு என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கடிதம் மூலம் கேட்கப்பட்ட விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வரும் திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிம்கார்டு மண்டல அதிகாரியிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் ஆவடி ஆணையரகங்களிலும், பாண்டிச்சேரி, காரைக்கால்  போன்ற பகுதிகளில் இதே போன்ற மோசடிகள் நிகழந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து தகவல்கள் கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com