Pregnant elephant death - Palacode
Pregnant elephant death - PalacodeVivekanandhan, PT desk

தருமபுரி: உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் வயிற்றில் கண்டறியப்பட்ட சிசு!

பாலக்கோடு வனப்பகுதியில் மூன்று நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி யானை உயிரிழந்தது.
Published on

பாலக்கோடு வனப்பகுதியில் மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி யானை உயிரிழந்தது. கருவில் இருந்த 12 மாத சிசுவுடன் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அவற்றில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்ற காட்டு யானைகள் சில, அருகிலுள்ள கிராமப்புறங்களுக்குள் நுழைவதும், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பாலக்கோடு வனச் சரகத்திற்கு உட்பட்ட கேசர்குழி காப்புக்காடு பகுதியில் 26 வயது பெண் யானை ஒன்று கடந்த மூன்று நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வாக இருந்து வந்தது. இதனைக் கண்ட பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

Pregnant elephant death - Palacode
Pregnant elephant death - PalacodeVivekanandhan, PT desk

யானை சோர்வடைந்து ஒரே இடத்தில் இருந்ததால், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானையை பரிசோதனை செய்தனர். அப்பொழுது யானையின் உடல்நலம் மோசமான நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வனப்பகுதியிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வனப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

இதனையடுத்து வனப்பகுதியிலேயே யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது யானையின் கருவில் 12 மாதங்களேயான ஆண் சிசு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து வனப் பகுதியிலேயே கருவில் இருந்த அந்த 12 மாத சிசுவுடன் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இரைப்பையில் அலர்ஜி, பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக புழுக்கள் இருந்ததே யானை இறந்ததற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

கடந்த 45 நாட்களில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மூன்று யானைகள் மற்றும் ஒரு சிசு என எட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com