
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக விளங்குபவர் சுப்மன் கில்(24). தன்னுடைய நேர்த்தியான ஷாட்களால் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ள சுப்மன் கில் இந்திய அணிக்கு நிரந்தர தொடக்க வீரராக நம்பிக்கை அளித்து வருகிறார். இத்தகைய சூழலில்தான் சுப்மன் கில்-க்கு கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.
இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (platelet count) குறைந்து வருவதன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் அவர், நலமுடன் இருப்பதாகவும், உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் இருப்பதால் உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. என்றும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடாத சுப்மன் கில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கமாட்டார். இவர் தொடர்ந்து சென்னையில் தங்குகிறார். மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா என்பது குறித்து ஐயங்கள் எழுந்துள்ளது.