காவிரிக்காக இன்று முழு அடைப்பு: எது செயல்படும்..? எது செயல்படாது..?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
முழுஅடைப்பின் போது தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பேருந்துகள் மற்றும் ரயில்களை மறிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வணிகர் சங்கப் பேரவை சார்பில் 11ஆம் தேதி நடத்துவதாக இருந்த கடையடைப்பு இன்று நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இதனிடையே முழுஅடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என அதன் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். எனவே முழு அடைப்பு போராட்டம் பெரும் வெற்றிபெறும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எது செயல்படும்? எது செயல்படாது?
மளிகை கடைகள் உள்ளிட்ட வணிகர் சங்கங்களின் கீழ் வரும் அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். காய்கறி சந்தை, உணவகம் ஆகியவற்றை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் முழுஅடைப்பில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாமல் பணிக்க வரவேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டிருக்கும். காவிரி பிரச்னைக்காக மருத்துகடை உரிமையாளர்கள் கடந்த 3 தேதி கடையடைப்பு நடத்திவிட்ட நிலையில், மருந்துக்கடைகள் இன்று திறந்திருக்க வாய்ப்பு உள்ளது. காலை 9 மணி வரை பால் விநியோகம் பாதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்ற நிலையில் ரயில் மறியல் நடத்தப்படும் எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கின்றன. ஆட்டோக்கள், கால் டாக்சிகள் வழக்கம் போல் ஓடும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வங்கிகள், மருத்துவமனைகளும் வழக்கம் போல் செயல்படும்.