அடுத்தடுத்து அதிர்ச்சி..! நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி முந்தைய ஆண்டும் நடந்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித் சூர்யா போன்று ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மேலும் 6 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது காவல்துறை.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததை களஆய்வின் மூலம் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், உதித் சூர்யா மற்றும் மருத்துவரான அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்து, விசாரணை நடத்தியது சிபிசிஐடி காவல்துறை.
வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டதுடன், இதற்காக இடைத்தரகர்களிடம் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறியிருந்தார் வெங்கடேசன். மற்ற நபர்கள் மூலம் தேர்வெழுதி, உதித் சூர்யா போல மேலும் 6 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் என்பவர்தான், இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் நன்றாகப் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பணம் கொடுத்து, பிற மாணவர்களுக்கான நீட் தேர்வை எழுத வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. உதித் சூர்யா இந்த வருடம் சேர்ந்தது போன்று, கடந்த ஆண்டிலேயே இம்ரான் என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படிப்பையும் முடித்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்திருக்கிறது.
இவர் ஏற்கெனவே மொரிஷியஸில் மருத்துவம் படித்து வந்திருக்கிறார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். உதித் சூர்யா விவகாரம் வெளிவரத் தொடங்கியவுடன், நாமும் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இம்ரான் கடந்த சில தினங்களுக்கு மொரிஷியஸுக்கு தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணனைப் போன்று இம்ரானின் தம்பி இப்ரானும் ஆள்மாறாட்டம் செய்து, இந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உதித் சூர்யாவின் தந்தையைப் போன்று அவரின் நண்பரான மருத்துவர் சரவணனும், ஆள்மாறாட்டம் செய்து தனது மகன் பிரவீனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. சரவணன்தான் இடைத்தரர்களிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்ததாக உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி விசாரணையின்போது கூறியதாக தெரிகிறது.
தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்று வரும் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணனைக் கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், தேனியில் வைத்து விசாரிக்கவுள்ளனர். இதேபோன்று நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ராகுல், அபிராமி ஆகியோரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள இடைத்தரர்கள் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்காக நீட் தேர்வு எழுதியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டுகிறது சிபிசிஐடி.