கோவை மாணவி வன்கொடுமை| சம்பவ இடத்திற்கு அருகே சட்டவிரோத மதுபான கடை.. அதிர்ச்சி தகவல்!
கோவையில் மாணவி மீது நடந்த வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சட்டவிரோத மதுபான கடை இயங்கிய தகவல் வெளியானது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கோவை மாநகரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து மாணவியின் ஆண் நண்பரை தாக்கியுள்ளனர்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக மூன்று பேர் கொண்ட அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
மேலும், கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், பீளமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு, அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்..
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பலை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சட்ட விரோதமாக மதுபான கடை இயங்கிவந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறையிடம் கேட்டபோது, பல்வேறு பிரச்னைகளாலும் உள்ளூர் மக்களின் புகாரின் அடிப்படையிலும் முன்பே அந்த மதுபான கடை மூடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அந்த மதுபான கடை ஊழியரை சிறைபிடித்து, மதுபான கடையிலிருந்த மதுபானங்களை உடைத்தும் தின்பண்டங்களை கீழே வீசி எரிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்றும் கேள்வி எழுப்பி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக தலைவர் விஜய், கோவை மாணவிக்கு நடந்த சம்பவத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறாத நிலையில், அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் வன்கொடுமையா? என்று கேள்வி எழுப்பி குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தனது கண்டனத்தையும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்ட பின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில், தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

