சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிரத்யேக விடுதி !

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிரத்யேக விடுதி !

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிரத்யேக விடுதி !
Published on

சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகள் தங்க இலவசமாக ஒரு பாதுகாப்பு இடம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த கௌசல்யா-சங்கரின் ஆணவ கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இதற்குபிறகு தமிழக அரசு சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உதவ 24 மணி நேர உதவி மையத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் அளித்து வந்தது. எனினும் தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை நிலையங்களையே தேடி செல்கிறார்கள். இதை மாற்றுவதற்கு திருச்சியில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது இவர்களுக்காக திருச்சியில் ஒரு பிரத்யேக விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை ‘ஆதலினால் காதல் செய்வீர்’  என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த விடுதி திருச்சியிலுள்ள அண்ணா நகரின் போலிஸ் காலனியில் அமைந்துள்ளது. இது 345 சதுர அடி நில பரப்பில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சே.குணசேகர் பேட்டியளித்துள்ளார். அதில் “இந்த விடுதி சாதி மறுப்பு திருமணம் செய்து பாதுகாப்பு இடம் இல்லாமல் தவிப்பவர்களுக்காக கட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் சாதி மறுப்பு திருமணம் செய்த மணமக்கள் அதிக நேரம் காவல்நிலையங்களில் தங்க முடியாது அதனால் அவர்களுக்கு இது பயன்பெறும் வகையில் இருக்கும்.

மேலும் இங்கு வரும் மணமக்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடம் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை தரவுள்ளோம். இந்த விடுதிக்கு உரிய அங்கிகாரம் கோரி மாவட்ட சமூக நலத் துறைக்கு விண்ணப்பித்துள்ளோம். இதேபோன்ற விடுதிகள் பிற மாவட்டங்களிலும் அமைத்தால் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நல்ல பாதுகாப்பாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதிகளில் சாதி மறுப்பு செய்தவர்களுக்கு உதவ சிறப்பு பிரிவை அமைக்க கோரி உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரை இந்தச் சிறப்பு பிரிவு நான்கு மாவட்டங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com