பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - காவல் ஆணையரிடம் புகார்
(பூமிநாதன்)
மதுரையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் போலீசார் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த சந்தான லட்சுமி என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சந்தான லட்சுமிக்கும், சீனிவாச பெருமாள் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில் கணவர் தரப்பில் விவகாரத்து கேட்டு சந்தான லட்சுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான, தனது சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவரை சந்தான லட்சுமி தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, கணவன் - மனைவி பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறிய பூமிநாதன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பணத்தை சந்தான லட்சுமியிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தான லட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் “நேற்றைய தினம் என்னை தொடர்புகொண்ட பூமிநாதன், கேரளாவில் சாமியார் ஜோதி என்பவர் மூலமாக பூஜை நடத்தினால் கணவருடனான பிரச்னை தீர்க்கமுடியும் எனக் கூறினார். இதற்காக ஜோதியும் மதுரை வந்தார். அப்போது என் கணவர் பயன்படுத்திய சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்து வரவேண்டுமென கூறினார். நானும் அவர்கள் கூறியதை அப்படியே செய்து அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். பின்னர் நான்கு பேரும் காரில் சென்றோம். அந்த நேரத்தில் சாமியார் ஜோதி என் மீது ஒருவகையான மையை தடவினார். இதனால் எனக்கு மயக்கம் வந்தது.
பின்னர் நான் எழுந்து பார்த்தபோது என் உடைகள் கலைந்து இருந்தது. எனக்கு பாலியல் ரீதியாக துன்பம் நடைபெற்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

