டியூசன் சொல்லித் தருவதாக பாலியல் தொந்தரவு... பள்ளி ஆசிரியர் மீது புகார்
லால்குடி அருகே ஆசிரியர் வீட்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ளது காந்திநகர். இங்கு வசிக்கும் டேனியல் என்பவர் மணச்சநல்லூர் அருகேஅ ரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பிற்கு ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோயமுத்தூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருவதால் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்.
வீட்டில் தனியாக இருக்கும் ஆசிரியர் டேனியல், பள்ளி மாணவிகளை டியூசன் சொல்லித் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து, வீட்டிலேயே வைத்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக ஏற்கெனவே பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இவரது காரில் 16 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை அழைத்து சென்றபோது, மாணவியின் அலறல் சத்தம் கேட்கவும் அக்கம் பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100-க்கு போன் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் ஆசிரியர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஆசிரியர் வீடு பூட்டிய நிலையில் இருந்தது.
சுமார் அரை மணி நேரம் அவர்கள் கதவை தட்டியும் திறக்காத நிலையில் ஜன்னல் வழியே ஆசிரியர் எட்டிப் பார்த்துள்ளார், அப்போது போலீஸ் வந்துள்ளதை அறிந்த அவர், அவசர அவசரமாக வந்து கதவை திறந்தார். அப்போது உள்ளே சென்ற போலீசார் வீட்டை ஆய்வு செய்தபோது 16 வயது மாணவி அவரது படுக்கை அறையிலே மிகுந்த பயத்தோடு காணப்பட்டார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் இருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறனர்.