வாட்ஸ்ஆப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காவலர் அட்டூழியம்
போலி சிம்கார்டை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னையில் காவலர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர், 8ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளின் படத்தை வாட்ஸ்ஆப் டி.பி.யாக வைத்திருந்தார். அந்த மாணவியின் படத்தை வைத்து ஆபாச வீடியோ தயாரித்த ஒருவர், அதனை அவரது தந்தையின் எண்ணிற்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாணவியின் தந்தை புகார் அளித்ததையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை குமரன் நகர் காவல்நிலையத்தில் குறிப்பிட்ட செல்போன் எண் கடைசியாக செயல்பட்டது தெரியவந்தது. அங்கு பணியாற்றும் உளவுத்துறை காவலர் செந்தில்கேசவன் ஆபாச வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.இவர் கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை கைது செய்த களியக்காவிளை போலீசார், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆவணங்கள் இல்லாத போலி சிம்கார்டை பயன்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோ மற்றும் படங்களை அனுப்பி காவலர் செந்தில்கேசவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவலரே, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.