இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு - அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி பத்மநாபபுரம் அ.இ.அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் குமார்(47) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(47). இவர் தக்கலை பேருந்து நிலைய சந்திப்பில் அம்ருதா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இக்கடையில் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது குமார் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதனை அவர் எதிர்த்தபோது அவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் பத்மநாபபுரம் நகர செயலாளரான குமார் சிறிது காலம் அமமுக கட்சியில் சேர்ந்து பணியாற்றியதாகவும், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.