‘பாலியல் புகாருக்குள்ளான ஐஜியை இடமாற்றம் செய்யுங்கள்’ - பெண் எஸ்பி மனு
காவல்துறை ஐஜி ஒருவருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி, அந்த ஐஜியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவை மாற்றி அமைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், உயரதிகாரி தமக்கு அளித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து, விசாகா குழுவை அமைக்க வேண்டும், அந்த உயரதிகாரி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கடந்த மாதம் 17ம் தேதி புகார் அளித்ததாக கூறியுள்ளார். ஆனால், இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெண் எஸ்.பி. கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சத்ருஹன புஜாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, விதிகளை பின்பற்றி அமைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்படி குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தப் புகார் லஞ்ச ஒழிப்புத் துறையின் உட்புகார் பிரிவில்தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக அது டிஜிபி அமைத்த குழுவின் முன் அளிக்கப்பட்டிருப்பதாகவும், கூறினார்.
அப்போது பெண் எஸ்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம்தான் அளிக்கப்பட்டது என விளக்கமளித்தனர். இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், பெண் எஸ்பி விசாரணைக் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், ஆனால் அந்தக் குழுவை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், விசாரணைக் குழுவை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.