தமிழ்நாட்டில் கனமழை
தமிழ்நாட்டில் கனமழைPTI

திருவள்ளூர் | தொடர் கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்தான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

1. மழைநீரை அப்புறப்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை.!

அத்திப்பட்டு உயர்நிலைப்பள்ளி
அத்திப்பட்டு உயர்நிலைப்பள்ளிpt web

திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, மாணவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பிருப்பதாக கூறி விரைவில், பள்ளியை சுற்றி தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

2. வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும் மழை நீர்.!

செங்குன்றம்
செங்குன்றம்pt web

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் அனெக்ஸ் ரோடு பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், அதிக அளவில் மழை நீர் தேங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் செல்ல முடியாமல் கூட தவித்து வருகின்றனர்.

மேலும், இந்தப் பகுதியின் அருகாமையில் உள்ள கொசஸ்தலை ஆற்றிற்கு செல்லும் நீரோடை உடைந்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அரசு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்த அதிகாரிகளும் தங்களை வந்து சந்திக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

3. சாலையில் புகுந்த பாரிவாக்கம் ஏரி உபரி நீர்.!

சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்
சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்pt web

தமிழகத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நிரம்பிய பாரிவாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் சாலையின் இரு வேறு பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பூந்தமல்லி பட்டாபிராம் சாலையில் கடும் சிரமத்துடன் வாகன ஓட்டிகள் பயணித்து வரும் நிலையில், சில இருசக்கர வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் தவறி விழுந்து வருகின்றனர்.

இதுகுறித்து பாரிவாக்கம் ஊராட்சி செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நெடுஞ்சாலை துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருக்கும் வெள்ளை நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்..

4. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர்.!

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைpt web

திருவள்ளூரில் 4 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும்  சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இதையடுத்து, மழை நீர் செல்ல ஏதுவாக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com