ஏழு பேர் விடுதலை: முதல்வர் எந்த சட்டச் சிக்கலிலும சிக்கிக்கொள்ள மாட்டார் - அமைச்சர் ரகுபதி

ஏழு பேர் விடுதலை: முதல்வர் எந்த சட்டச் சிக்கலிலும சிக்கிக்கொள்ள மாட்டார் - அமைச்சர் ரகுபதி
ஏழு பேர் விடுதலை: முதல்வர் எந்த சட்டச் சிக்கலிலும சிக்கிக்கொள்ள மாட்டார் - அமைச்சர் ரகுபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரை கட்டாயப்படுத்த முடியாது. இதில் எந்த சிக்கலிலும் முதலமைச்சர் சிக்கிக் கொள்ள மாட்டார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறைச்சாலையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி, கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும் போது....

“மதுரை மத்திய சிறையில் 1562 கைதிகள் உள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளோம். ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் என்பதால் வசதிகளை அதிகரிக்க கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் கைதிகளின் நலனில் அக்கறை இல்லை. ஆனால், கைதிகள் மீதும் அக்கறை கொண்டவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

மருத்துவ வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். விடுதலை கோரும் கைதிகளை விடுவிக்க பரிசீலனை செய்யப்படும். மதுரை மத்திய சிறை கட்டிடம் பழமையானது என்பதால் வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். கவர்னர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குடியரசு தலைவர் கையில் உள்ளது. அவரை கட்டாயம் படுத்த முடியாது. இதில் நிறைய சட்டச் சிக்கல்களை உருவாக்க பார்க்கிறார்கள். முதலமைச்சர் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ளமாட்டார்.

நீட் ஆய்வுக் குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோல் கேட்டு அவரது தாயார் மனு கொடுத்தால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com