”முகத்தை உடைத்துவிடுவேன்” - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை அவமதித்த பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!

அரசுப் பேருந்தில் ஏற்றாமல் பகிரங்க மிரட்டல் விடுத்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோரிக்கை விடுத்ததை ஏற்று பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது எனக் கூறியுள்ளார்.

அதற்கு இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என சச்சின் சிவா பதிலளித்துள்ளார். மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து ”முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்” என கூறி மிரட்டல் விடுத்துள்ளார் நடத்துனர். மேலும் இதுகுறித்து கேட்டபோது, ”அப்படித்தான் பேசுவேன். உன்னை வண்டியில் ஏற்ற முடியாது” எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கும் வந்த நடத்துனர், ”நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்ததுடன், மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமலேயே அப்படியே விட்டுசென்றுள்ளார்.

அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலர் முன்பாகவே, ”நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம்” எனக் கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார்.

அரசுப் பேருந்தில் ஏற்றாமல் பகிரங்க மிரட்டல் விடுத்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோரிக்கை விடுத்ததை ஏற்று பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com