Exclusive | “முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றி” - சிறைக்கு வெளியே செந்தில்பாலாஜி கண்ணீர் மல்க பேட்டி!
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, 471 நாட்கள் கழித்து சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.
நெடுநேரமாக புழல் சிறைக்கு வெளியில் காத்திருந்த தொண்டர்கள், செந்தில் பாலாஜி வெளியில் வந்ததும் அவரை மலர் தூவி வரவேற்றனர். புழல் சிறை நுழைவு வாயில் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் மாதவரம் - ஆந்திர சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சிறைக்கு வெளியே புதியதலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “என்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சட்டப்படி வென்று நிரபராதி என்று நிரூபிப்பேன்..
வழக்கில் இருந்து மீண்டு வருவேன். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.. பரிசோதனை செய்துவிட்டு அடுத்தகட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும்.
கரூர் மாவட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,. முழுக்க முழுக்க கட்சியினர் உடனிருந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.