உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத் துறை.. கேவியட் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனைவி!

செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீது அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், ”தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்து இருக்கிறார்கள்” எனக் கூறி செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்றைய தினம் மேல்முறையீடு செய்த நிலையில், நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே ”அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது” என வலியுறுத்தி செந்தில் பாலாஜியின் மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com