“செந்தில் பாலாஜிக்கு நடந்தது சற்று கடினமான அறுவை சிகிச்சையாக தான் இருந்துள்ளது”-மா.சுப்பிரமணியன்

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் இருந்த 3 அடைப்புகள் தீவிரமானது. அவருக்கு 5 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன்கோப்புப் படம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 9 ஆவது சர்வதேச யோகா தினவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவத் துறை அதிகாரிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்கோப்புப்படம்

அப்போது பேசிய அவர், “உலகெங்கிலும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகள் உட்பட 178 இடங்களில் யோகா தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய மருத்துவத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் முழுமையாக கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இங்கு உள்ளன.

2006 - 07 கால கட்டத்தில் சென்னையில் 36 பூங்காக்களில் பொதுமக்களுக்கு இலவசமாக யோகா பயிற்றுவிக்கப்பட்டது. சென்னையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்றுவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி யோகாவை மக்களிடம் கொண்டு சேர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக்கு பல்வேறு பயிற்சி முறைகள் இருந்தாலும் யோகா மிகப்பெரும் அளவில் பயனளிக்கக் கூடியது.

இந்தியாவிலேயே முதன் முதலில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருந்தது. இதர்காக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்காக மாதவரம் பால்பண்ணை பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரும்பாக்கம் பகுதியில் இந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.2 கோடி செலவில் அலுவலகமும் திறக்கப்படடுள்ளது. ஆனால் இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வருகிறார். காரணம், முதலமைச்சரே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார், அவரே துணை வேந்தரை நியமிப்பார் என்று நாங்கள் சொல்கிறோம்.

‘வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டும், துணை வேந்தரை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும்’ என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் மீன் துறை பல்கலைக் கழகத்துக்கு முதலமைச்சர் தான் வேந்தராக உள்ளார். அவர் தான் துணை வேந்தரையும் நியமித்து வருகிறார். அதேபோன்று குஜராத், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் கூட பல்கலைக் கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இது போன்ற உதாரணங்களை எல்லாம் கூட ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும்கூட ‘வேந்தராக ஆளுநரே இருக்க வேண்டும்’ என்று நினைத்து, சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அனுமதியே வழங்காமல் தவிர்த்து வருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

அமைச்சர் செந்தில் பாலாஜியை பொருத்தவரை, அவருக்கு 5 மணிநேர அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. தற்போது அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகான தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று மாலைதான் செந்தில் பாலாஜி சுய நினைவுக்கு வருவார். நான் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மருத்துவர்களிடம் பேசி வருகிறேன்.

3 அடைப்புகள் இருந்ததால் சற்று கடினமான அறுவை சிகிச்சையாக தான் இருந்துள்ளது. தலைசிறந்த இதய மருத்துவர் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் நேரில் சென்று சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சிறைத் துறையிடம் நான் அனுமதியும் கேட்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்பு புகைப்படம்

கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஜூன் 24 -ஆம் தேதி 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 10 இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com