செந்தில்பாலாஜி வசமிருந்த துறைகள் இந்த அமைச்சர்களுக்கு மாற்றம்? - ஆளுநருக்கு முதல்வர் செய்த பரிந்துரை

செந்தில்பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். ஜூன் 14 நள்ளிரவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படுமா என கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய இரண்டு துறைகளும் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மின்சாரத் துறையையும், வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதலாகக் கவனிக்கும் வகையில், ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com