செங்கோட்டையன் பொய் சொல்லுகிறார்: மைத்ரேயன் குற்றச்சாட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் கூறுவது பொய் என்று ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்பி மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு மேற்பார்வையில் விசாரணை நடத்தக்கோரி டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் மைத்ரேயன் தலைமையில் மனு அளித்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் போக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அவரை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்ட மைத்ரேயன், செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்னும், பின்னும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். அதேபோல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டார். தங்களது கோரிக்கைகளை குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியிடம் அளித்ததாக மைத்ரேயன் கூறினார். ஜெயலலிதாவைப் பார்த்ததாக செங்கோட்டையன் கூறுவது பொய் என்றும் மைத்ரேயன் கூறினார்.