தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்pt web

LIVE : விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. அடுத்தது என்ன?

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர்

கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்தார் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 2021ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் செங்கோட்டையன்

ராஜினாமா செய்தது ஏன்?

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்web

அதிமுக வலிமை பெற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, போர்க்கொடி உயர்த்தினார் செங்கோட்டையன். இதனால் அவர் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். அதன் பிறகும் செங்கோட்டையன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் விஜயின் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவின. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

செங்கோட்டையனும், முன்னாள் எம்.பி சத்யபாமா போன்ற அவரது ஆதரவாளர்களும், வரும் 27ஆம் தேதி, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு, தவெகவில் அமைப்பு ரீதியான பணிகளில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.. இந்நிலையில்தான் செங்கோட்டையன் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தவெக எப்படி செங்கோட்டையனை பயன்படுத்திக்கொள்ளப்போகிறது

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்PT

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியக் கருவியாக செங்கோட்டையன் இருப்பார். சட்டமன்றங்களிலும், பொதுவெளியிலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களை எப்படி ஒருங்கிணைப்பது போன்றவற்றில் எல்லாம் செங்கோட்டையன் அனுபவம் வாய்ந்தவர். அனுபவம் என்பதும் இளமை என்பதும் வேறு. இது இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போக வேண்டும்.

தவெக எப்படி செங்கோட்டையனை பயன்படுத்திக்கொள்ளப்போகிறது என்பது முக்கியமான விஷயம். செங்கோட்டையனின் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் அவருக்கு சில பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அங்கு இளைஞர்கள் இருப்பதால் தலைமுறை இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு தவெக வளர வேண்டும்.

விஜயை ஆதரிப்பது என்று எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் முடிவெடுத்திருக்கிறார். இப்போது அதிமுகவில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவர்களும் தவெகவிற்கு வரலாம் என்ற சமிக்ஞ்யையும் இதன்மூலம் வெளிப்படும். அதிமுகவில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள் விஜயின் தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு இனி தயக்கம் இருக்காது. செங்கோட்டையனே சென்றுவிட்டார்.. நாம் செல்வதில் என்ன தவறு என்று நினைப்பார்கள். தவெக நமது கூட்டணிக்கு வந்துவிடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வியூகத்திற்கு இது முற்றுப்புள்ளி வைத்துவிடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தவெக எனும் கட்சி அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு வழியில்லை. தவெகவிற்கு அரசியல் ஸ்திரத்தன்மை. அதிமுகவை பொறுத்தவரை இது மைனஸ் பாயிண்ட்தான். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அதை நிவர்த்தி செய்துவிடும். ஏனெனில் எம்.ஜி.ஆர் கொடுத்த இரட்டை இலை சின்னம் அவர்களிடம் இருக்கிறது. திமுகவிற்கு இதில் எந்த சிக்கலும் இல்லை. திமுகவிற்கு எதிரான வாக்குவங்கி எவ்வளவுக்கு எவ்வளவு பிளவுபடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு லாபம்.

யார் இந்த செங்கோட்டையன்..? 1977-லேயே தொடங்கிய வெற்றிப் பயணம்..

அ.தி.மு.க போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலான, 1977 முதல் 2021 வரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் செங்கோட்டையன். 1996 தேர்தலில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 2001-ம் ஆண்டு அவருக்குக் கட்சியில் சீட் வழங்கப்படவில்லை. தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.

தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கான உதாரணத்தை அவரது வெற்றியில் இருந்துகூட சொல்லலாம். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 10 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் செங்கோட்டையன் மட்டுமே 8 முறை வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர் கருணாநிதி, தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்ததாக அதிக முறை எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கோட்டையன் தான்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்pt web

அதுமட்டுமல்லாது, போக்குவரத்து, வருவாய், வனம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி எனப் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலகட்டத்தில், ஜெயலலிதா ஓபிஎஸ்க்கு அடுத்து மூன்றாம் தலைவராகவும், இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்களிலேயே அதிகாரமிக்க தலைவராகவும் வலம்வந்தவர்.

1991 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்து ஜெயலலிதா முதல்வரானபோது, செங்கோட்டையன் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அதேவேளையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர், கழக தலைமை நிலையச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன்தான் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்web

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, சசிகலா அணியில் செங்கோட்டையன்தான் அவைத்தலைவராக இருந்தார். சசிகலா சிறை சென்றபோதுகூட அக்கட்சியின் அதிகார மையமாக ஐவர் அணி செயல்பட்டது. அதில், மிக முக்கியமானவர் செங்கோட்டையன். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்தபிறகு கட்சியின் அவைத்தலைவராக செங்கோட்டையன்தான் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஒரு காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு குருவாக அறியப்பட்டவர், தற்போது அவராலேயே ஓரங்கப்பட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜினாமா ஏன்?

செங்கோட்டையனை திமுகவிற்கு வரவேற்கிறேன் - அன்வர் ராஜா

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனை திமுகவிற்கு வரவேற்கிறேன் என முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசியுள்ளார்..

செங்கோட்டையன் - சேகர்பாபு சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த செங்கோட்டையன், திமுக அமைச்சர் சேகர்பாபுவையும் சந்தித்து பேசியுள்ளார்..

செங்கோட்டையனின் அடுத்து நகர்வு என்ன? - கோலாகல ஸ்ரீநிவாஸ்

செங்கோட்டையனுக்கு இரண்டு வாய்ப்பு இருக்கிறது., ஒன்று திமுக, ஆனால் திமுகவிற்கு சென்றால் எடப்பாடி பழனிசாமி சொன்ன திமுகவின் பி டீம் என்பது உண்மையாகிவிடும், அதனால் அவர் மற்றொரு வாய்ப்பாக தவெகவிற்கு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு.. அதற்காக அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க வாய்ப்புண்டு அல்லது தவெகவில் நேரடியாக இணையவும் வாய்ப்புண்டு..

செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றால் விஜய்க்கு பெரிய லாபம் எல்லாம் ஒன்றும் கிடையாது.. செங்கோட்டையன் வந்தால் கொங்குமண்டலத்தையே கைப்பற்றிவிடலாம் என்றெல்லாம் ஒன்றுமில்லை, அந்தளவு மாஸ் லீடர் செங்கோட்டையன் கிடையாது..

- மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ்

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்!

முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்தார். இத்தகைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன்.

தவெகவில் அவர் இணையும் பட்சத்தில் என்ன பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்பது குறித்து யூகங்கள் கிளம்பியுள்ளன. என்.ஆனந்திற்கு இணையாக பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. செங்கோட்டையன் இணைவது கொங்கு மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அவரது அரசியல் அனுபவமும் தவெகவுக்கு பெரிய அளவில் பயன்படும் என்று சொல்லப்படுகிறது.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் இல்லத்தில் விஜயைச் சந்தித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், “அரசியலில் வெற்றி என்பது நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். வெற்றி பெறக்கூடிய கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அந்த பிம்பம் செங்கோட்டையன் இணைப்பு மூலம் உருவாகும். செங்கோட்டையன் போன்ற அனுபவசாலிகளை விஜய் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்துதான், அதன் தாக்கத்தை நான் யூகிக்க முடியும்” எனத் தெரிவித்தார்..

செங்கோட்டையனுக்கு தவெகவில் அமைப்பு பொதுச் செயலர் பதவி?

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை

“ இனிவரும் காலம் அதிமுகவிற்கு பெரும் சிக்கல்கள் எழக்கூடிய காலமாக இருக்கும்”  பத்திரிகையாளர் சுவாமிநாதன்!

பத்திரிகையாளர் சுவாமிநாதன்
பத்திரிகையாளர் சுவாமிநாதன்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. அவர் திமுகவிற்கு சென்றிருந்தால் துரோகம் செய்துவிட்டார் என்று ஒருவரியில் அதிமுகவால் கடந்து சென்றிருக்க முடியும். இனி அதற்கான சூழல் இல்லை. இனிமேல்தான் தேர்தல் களேபரம் தொடங்க இருப்பதால் அதிமுகவில் சீட் கிடைக்காமல் இருப்பவர்களை செங்கோட்டையனை கொண்டு அவர்களை தவெகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம். இனிவரும் காலம் அதிமுகவிற்கு பெரும் சிக்கல்கள் எழக்கூடிய காலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “தொடர்ச்சியாக விஜய் எம்ஜிஆரின் பெயரையும் அவரது பாடல்களையும் பயன்படுத்துகிறார். அண்ணாவின் பெயரையும் பயன்படுத்துகிறார். இவர்கள் எல்லாம் தவெகவிற்கு செல்லும்பட்சத்தில் எம்ஜிஆர், அண்ணாவின் பெயரை பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதுபோல் ஆகிவிடும். ஒருவேளை டிடிவியும், ஓபிஎஸ்ஸும் தவெக அணியில் சேர்ந்துகொண்டார்கள் என்றால் அதிமுகவின் ஒரு பிரிவே தன்னுடன் இருப்பதுபோன்ற தோற்றத்தை விஜயால் ஏற்படுத்த முடியும். ஓபிஎஸ் 15 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்.. டிடிவி ஏற்கனவே விஜய் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். இவர்களை அதிமுகவில் இணைக்கமுடியவில்லை என்று தவெக அணியில் செங்கோட்டையன் இணைத்துவிட்டால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குதான் சிக்கல். செங்கோட்டையனை தவெக எந்த அளவிற்கு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் தவெகவிற்கான பலம் பலவீனம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com