அதிமுக ஆட்சியில் கனிம வளத்துறையில் பல கோடி ரூபாய் மோசடி - செல்வப்பெருந்தகை பேட்டி

அதிமுக ஆட்சியில் கனிம வளத்துறையில் பல கோடி ரூபாய் மோசடி - செல்வப்பெருந்தகை பேட்டி
அதிமுக ஆட்சியில் கனிம வளத்துறையில் பல கோடி ரூபாய் மோசடி - செல்வப்பெருந்தகை பேட்டி

கடந்த அதிமுக ஆட்சியில் கனிம வளத்துறையில் ஏழு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி குறித்து சட்டபேரவை பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை திண்டுக்கல்லில் பேட்டியளித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு 30.03.22 மற்றும் 31.03.22 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதல் நாளான இன்று அய்யம்பாளையம், என் பஞ்சம்பட்டி ஆகிய கிராமங்களில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது, ’’தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக பொது கணக்கு குழு ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள தவறுகளை சுட்டிகாட்டி வருகிறது. நாளை கொடைக்கானலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனிம வளத்துறையில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த ஊழல் கண்டறியப்பட்டு அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. 5 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது? 5 லட்சம் கோடி கடனுக்கு வட்டிகட்ட கடன் வாங்கக்கூடிய நிலைமை எப்படி வந்தது? அதிமுகவினர் வேறுவழியில்லாமல் கடன் வாங்கி 5 லட்சம் கோடிக்கு வட்டி கட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 1,200 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 21 நாட்களில் 617 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் விட்டுச்சென்ற நிலையிலும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி மருத்துவம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளித்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் கிராமங்களில் சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com