மதுக்கடைகளை திறக்கும் முடிவை முதலமைச்சர் மனமுவந்து எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

மதுக்கடைகளை திறக்கும் முடிவை முதலமைச்சர் மனமுவந்து எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ
மதுக்கடைகளை திறக்கும் முடிவை முதலமைச்சர் மனமுவந்து எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

முதலமைச்சர் மனமுவந்து மதுக்கடைகளை திறக்கும் முடிவை எடுக்கவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கரிசல்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எல்லோரும் ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள், மே 17-க்கு பிறகு ஊரடங்கு நீடிக்க கூடாது என்றால் அனைவரும் தனித்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக ஒருவர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை.

கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலிப்பார். நிதி நிலைக்கு ஏற்ப கொரோனா நிதி வழங்க முடிவு செய்யப்படும். பஞ்சமில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் நமது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வணிகர்கள் கடை திறப்பதில் இன்னும் குழப்பம் ஏற்படுவதால் முறையான விதிமுறைகள் அறிவிக்கப்பட கோரிக்கை எழுந்துள்ளது. வணிகர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய தொலைபேசிக்கு அழைத்து கூறும் பட்சத்தில் அவர்களுக்கு காவல்துறை மூலம் தீர்வு வழங்கப்படும்.

நம்மை சுற்றி உள்ள மற்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்த காரணத்தால் நாமும் திறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. மதுவிற்காக மற்ற மாநிலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் செல்வதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரும் மனமுவந்து மதுக்கடை திறக்கும் முடிவை எடுக்கவில்லை. குடிமகன்கள் அவதிபடுகிறார்கள் என்ற அடிப்படையில்தான் மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 5 நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com