அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தரைத்தளம் உடைந்து விபத்து: பள்ளத்தில் விழுந்த தொண்டர்கள்
அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற நிகழ்ச்சியில், திறப்பு விழா காணாத ரவுண்டானாவின் டைல்ஸ் கற்கள் திடீரென உடைந்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களின் கற்சிலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுரையின் நுழைவுவாயிலாக இருக்கக்கூடிய முக்கியமான சந்திப்புகளில் தொன்மை வாய்ந்த பழமையான நினைவுச் சின்னங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில் கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமை அடைகிறோம். கபடி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மதுரையின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும், 42 லட்சம் மதிப்பீட்டில் இந்த சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாம் எல்லாம் மதுரைக்காரர்கள். எனவே மதுரையை நாம் தான் பெருமைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், ரவுண்டானாவின் மீது நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரவுண்டானா மேற்பகுதியில் அமைக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து உள்ளே பூமிக்குள் சென்றன. இதனால் அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றியிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் திடீரென பள்ளத்தில் விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள், அவர்களை பத்திரமாக கையை தூக்கி மேலே மீட்டனர்
பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ சற்று விலகி நின்று பேசிக்கொண்டிருந்ததால் அவருக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

