தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை?: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் ஏற்கெனவே கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளத்துப்பாக்கி கடத்தலில் ஈடுபட்டு கைதான இருவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் துப்பாக்கிகள் கடத்தி வரப்படுவதை உறுதி செய்து கொண்ட காவலர்கள், அதில் ஏறி ஆய்வு செய்தனர். திருவொற்றியூர் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, இரண்டு பேர் ரயிலில் இருந்து குதித்து ஓடினர். சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர். அதனால் காவலர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், திருமங்கலத்தைச் சேர்ந்த கமல் என்பது தெரியவந்தது. இவர்களுக்கும், கள்ளநோட்டு வழக்கில் ஏற்கனவே கைதாகி புழல் சிறையில் உள்ள முகமுது ரஃபீக் என்பருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இருவரிடம் இருந்து 5 கள்ளத் துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அவர்களின் வீட்டில் இருந்தும் ஒரு கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைதான பிரதீப், கமல் இதற்கு முன்பே மேற்குவங்கம் சென்று 5 கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி வந்து விற்றிருப்பதும்,10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கிகள் வாங்கியவர்கள் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.