யானைகளுடன் செல்ஃபி: விபரீத முயற்சியில் சுற்றுலா பயணிகள்!
குப்பைகளை தின்ன வரும் காட்டு யானையிடம், சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுப்பது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பகுதி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒடி அமைந்துள்ளது. தொரப்பள்ளியில் வீசப்படும் குப்பைகளை தின்பதற்காகத் தினமும் முதுமலை வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள், ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளது. மாலையில் தொரப்பள்ளி பகுதிக்குள் நுழையும் இந்த யானைகள் அதிகாலை தான் வனப்பகுதிக்குள் மீண்டும் செல்கின்றன. குறிப்பாக மக்னா யானை ஒன்று சாலையில் நடந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
தொராப்பள்ளி பகுதியில் மாலை நேரங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இருப்பது வழக்கம். இந்த நிலையில் சாலையில் நடந்து வரும் மக்னா யானையிடம் செல்பி எடுப்பதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். குப்பை தொட்டிக்கு வந்து குப்பைகளை சாப்பிடும் அந்த யானைக்கு அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற விபரீத முயற்சியால் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இப்படி செல்ஃபி எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.