“சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: சட்டப்படி அனைத்து உதவிகளையும் அறநிலையத்துறை செய்து வருகிறது!”

ஒட்டுமொத்த பக்தர்களும் அறநிலையத்துறை தான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபுPT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய மற்றும் முன்னோடி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “10 முதுநிலை திருக்கோயில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், வள்ளலார் நிலையம், பழனி, இருக்கன்குடி, திருவேற்காடு உள்ளிட்ட கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றுடன் மேலும் 5 கோவில்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. மருதமலை, சிறுவாபுரி, வயலூரில் ஒளவையாருக்கு மணிமண்டபம், மயிலாப்பூர் கலாச்சார மையம், திருவள்ளுவர் திருக்கோவிலை பிரம்மாண்டப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும்!

தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான். சிதம்பரம் கோவிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி சில தீட்சிதர்கள் செயல்படுகிறார்கள். 200 தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை ஆக்கிரமித்துள்ளனர். சிதம்பரம் திருக்கோவிலை தணிக்கை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறார்கள். விலை உயர்ந்த நகைகள் வரவு வைக்கப்பட்டது குறித்து தெரிவிக்க மறுக்கிறார்கள். இது அவர்களின் சொந்த நிறுவனம் போல் நினைக்கிறார்கள். மக்களின் ஆதரவால் நடக்கும் கோவில்பற்றி, அரசுக்கு தகவல் தரமறுக்கிறார்கள். மற்ற கோவில்களைப் போல் இங்கு ஒரு உண்டியல் கூட இல்லை.

சிதம்பரம் கோவில்
சிதம்பரம் கோவில் PT

பக்தர்களை நீதிமன்ற தீர்ப்பீன் படி கனகசபையின் மீது ஏறி வழிபாடு நடத்த நியாயத்தின் படி அனுமதிக்க கேட்கின்றோம். சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம். ஒட்டுமொத்த பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறைதான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனடிப்படையில் ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது.

‘அந்த தெய்வமே கலங்கி நின்னா’- தங்கப்பதக்கம் பட வசனத்தை மேற்கோள் காட்டி விமர்சித்த அமைச்சர்

இந்துசமய அறநிலையத்துறை மீது குற்றம் சொல்ல பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 286 சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு சிலைகள் மீட்கப்பட்டவில்லை. திருடுபோன சிலைகளை மீட்பது மட்டுமல்லாமல் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்கவும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழுக்கு, நிலங்கள் மீட்பு, கிராமபுற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடினர் பகுதி கோவில்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய ஒரு சிலர் நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. வேண்டுமென்று குற்றம் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

எந்த கோவிலுக்கு சென்றாலும் விருப்பப்பட்டு செல்பவர்களுக்கு வேறு ஏதும் அடையாளத்தோடு அல்லாமல் வந்தால் அனுமதிக்கிறோம். அறநிலையத்துறை கோவில்களில் மத அடையாளமின்றி வருபவர்கள் எல்லோருக்கும் அனுமதி உண்டு” என்றார். பேட்டியின் முடிவில் “காய்ந்து போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் சொல்லும், அந்த நதியே காய்ந்து போட்டா? ; துன்பம் படுறவங்க எல்லாம் தெய்வத்திடம் முறையிடுவார்கள், ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்றால்....” என்ற தங்கப்பதக்கம் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி தீட்சிதர்கள் மீது அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரத்தில், பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய சட்டப்படி அனைத்து உதவிகளையும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது. இதில் யார் பெரியவர்கள் என்ற பிரச்னை அல்ல. இறை வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் அனைவருமே, சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களது நோக்கம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com