போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டினாரா சீமான் வீட்டு காவலாளி? - வழக்கறிஞர் கொடுத்த விளக்கம்
நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டியது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் சீமான் வீட்டிலிருந்து வெளியில் வந்த நபர், அந்த சம்மனைக் கிழித்தார்.
நீலாங்கரை காவல்துறையினர் சீமானின் வீட்டிற்குள் சென்று சம்மனைக் கிழித்தது தொடர்பாக கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது, காவலாளி காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி அவர்களைத் தாக்க முயன்றதாக நீலாங்கரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், காவலாளியிடம் இருந்த துப்பாக்கியை போலீசாரை நோக்கி நீட்டியதாக கூறப்படுகிறது. காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்றும் பாதுகாப்பிற்காக அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி என்றும் தெரியவந்துள்ளது.
அப்போது அந்த காவலாளியை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். வேனில் ஏற மறுத்த அவர் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியிருக்கிறார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விவகாரம் தொடர்பாக காவலர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் சீமானின் மனைவி கயல்விழி. அதேவேளையில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக முறையான பதிலை கயல்விழி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் தரப்பின் வழக்கறிஞர் ரூபன், “சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக தகவல் வந்ததால்தான் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார். காவல்துறையினர் அத்துமீறி உள்ளே நுழையும்போதுதான் தள்ளுமுள்ளு நடக்கிறது. இவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றும்போதுதான் துப்பாக்கி அவரது இடுப்பில் இருந்தது தெரியவந்தது. அதை எடுத்துதான் கொடுத்தார்.. அன்றி அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டவெல்லாம் இல்லை. சம்மன் வீட்டில் ஒட்டப்பட்டிருந்தால் அது அப்படியே இருக்க வேண்டுமென்ற அவசியல் இல்லை. சம்மனில் இருந்த விபரங்களைத் தெரிந்துகொண்டபின் அதை கிழித்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.