சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரம் - பாதுகாவலர் அமல்ராஜ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
செய்தியாளர்: V.M.சுப்பையா
சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீசாருடன் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுபாகரையும், சீமான் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அமல்ராஜ் வைத்திருந்த கை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது மனித உரிமை மீறப்பட்டதாகவும், இதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் ப்ரவீன் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில், காவல் நிலையத்தில் வைத்து தம்மையும், சுபாகரையும் போலீசார் ஃபைபர் பைப் உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியதாகவும், முட்டி போட வைத்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சுபாகரை சாதி பெயரை குறிப்பிட்டு இழிப்படுத்தியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மனித உரிமைகளை மீறிய நீலாங்கரை காவல் ஆய்வாளர் ப்ர்வீன் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.