"துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல"-சீமான் கண்டனம் !
துல்கர் சல்மான் நடிப்பில் "வரனே அவசியமுண்ட" மலையாள திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை தவறாக பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான "காம்ரேட் இன் அமெரிக்கா " திரைப்படத்திலும் பிரபாகரனின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருப்பதால் அவருக்கு பிரபாகரன் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும்.
தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார் சீமான். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே பிரபாகரன் பெயர் பயன்படுத்தப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ள நடிகர் துல்கர் சல்மான், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.