“நடிகர் விஜய் அஞ்சக்கூடாது” - பிகில் சர்ச்சை பற்றி சீமான்
‘பிகில்’ பட சர்ச்சை குறித்து நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள ‘பிகில்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள இப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சி அனுமதி கேட்டு தயாரிப்பாளர் தரப்பில் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் ‘பிகில்’ உட்பட எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். ஆகவே படத்திற்கு அதிகாலை காட்சி கிடைக்குமா? கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்தப் பிரச்னை குறித்து நேற்று கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது, தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதை மீறி சிறப்பு காட்சிகளை திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி இருந்தார்.
மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவரது ட்விட்டர் பக்கத்தில்,“சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சீமான் பேட்டி அளித்துள்ளார். அவர், “நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.