“இனி சிறுபான்மையினர்-னு சொன்ன, செருப்ப கழட்டி அடிப்பேன்...” சீமான் அநாகரிக பேச்சு #Video

“ஒருவேளை பெரும்பான்மை, சிறுபான்மை என்று அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது என்றால் அந்த அரசியல் அமைப்பு சட்டத்தையே நான் எதிர்க்கிறேன்”- என சீமான் பேசியதன் முழு விவரத்தை, இங்கே இணைக்கப்படும் வீடியோவிலும் காணலாம்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, இன்று சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது அவர் பேசிய பல கருத்துகள் அநாகரிகமாக அமைந்தது. அவர் பேசியவற்றின் விவரத்தை இங்கு பார்ப்போம்.

தீரன் சின்னமலையின் நினைவு தினம்...

“ஒரு பெருமைமிகு வீரத்தின் அடையாளமாக இருக்கும் பாட்டனார் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று. எளிய வேளாண் குடியில் பிறந்து மாபெரும் வீரராக வளர்ந்து 19 வயதிலேயே மைசூரை தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட திப்பு சுல்தானையே எதிர்த்து வாழ்ந்து மறைந்த மாவீரன் தீரன், சின்னமலை. அது மட்டுமில்லாமல் ஆங்கிலேயரை எதிர்த்து பல்வேறு போர்கள் தொடுத்து அதிலும் வெற்றி கண்டுள்ளார். ‘இத்தனை பெரிய மண்ணில் இந்த மண்ணை ஆள்வதற்கு ஒருவன் கூடவா இல்லை’ என்று அன்று தீரன் சொன்னான். அதையே தான் இன்று அவரின் பேரன் நானும் சொல்கிறேன்”

இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் பற்றி...

“அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யார்? நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளேன் என்று கூறியது யார்? நான் என்றும் ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை. நாட்டுக்காக தான் அரசியல் செய்கிறேன். பைபிள், குரானில் கூறியுள்ளதைப் போன்று இன்று தேவனின் ஆட்சி முறையா இங்கு நடக்கிறது? எல்லாம் சாத்தானின் ஆட்சி முறையாக தான் இருக்கிறது.

Christian and Islam
Christian and IslamTwitter

ஊழல் லஞ்சம் இயற்கை வளங்களை சுரண்டுவது என்று சாத்தானின் ஆட்சி நடக்கிறது இங்கே. அந்த ஆட்சிக்கு துணை போபவர்கள் யார்?  இதைத்தான் நான் குறிப்பிட்டு பேசினேன். இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டுமே அநீதிக்கு எதிராக பிறந்த மதங்கள். ஆனால் இங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யார்?”

“மாறி மாறி வாக்களிக்கும் தவறை அவர்கள் செய்யக்கூடாது”

மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று ஆட்சி செய்வதை எப்படி இவர்கள் சகித்துக் கொள்கிறார்கள்? எனக்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுடன் இருக்கும் அன்பின் உறவின் வெளிப்பாடுதான் இது. உங்கள் மீது இருக்கும் பேரன்பின் வெளிப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்றால் நமக்குள் இருக்கும் உறவில் என்ன அர்த்தம் இருக்கிறது? மீண்டும் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களிக்கும் தவறை அவர்கள் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த கருத்தை கூறியிருந்தேன்”

‘சிறுபான்மை மக்களை திட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?’ - என்ற செய்தியாளர் கேள்விக்கு சீமானின் அநாகரீக பதில்:

”உலக வரலாற்றில் மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை இனம் அடையாளப்படுத்தப்படுவது இல்லை. மொழியின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி பேசும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் இனத்தின் பெரும்பான்மையினர். வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் இஸ்லாமியர் கிறிஸ்தவர்களை சிறுபான்மையர் என சொன்னால் செருப்பால் அடிப்பேன்” என்று அநாகரிகமாக பேசினார்.

“அப்படியானால், அரசியல் அமைப்பு சட்டத்தையே நான் எதிர்க்கிறேன்”

மேலும் “எனக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பாரபட்சதோடு நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த இனத்தை அழித்த காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அதற்கு துணை போன திமுக போன்ற கட்சிகளுக்கும் இந்த மக்கள் இன்னும் வாய்ப்பளிக்கிறார்கள் என்ற கோபத்தில் தான் இந்த கருத்தை கூறியுள்ளேன்.

குடும்பம் குடும்பமாக இவர்களை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருப்பார்களாம். அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை இருக்கிறது? ஒரு குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் அதிகாரம் முழுவதும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? மக்களை சிறுபான்மையினர் என்று சொல்வதையும் சிறுபான்மையினர் என்ற வார்த்தையுமே நான் எதிர்க்கிறேன், வெறுக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தால் அதை நான் எதிர்க்கிறேன். ஒரு மனிதன் மதம் மாறிக்கொள்ள  முடியும். அப்படி இருக்க மதத்தின் அடிப்படையில் எவ்வாறு அவனை கணக்கிட முடியும்?

Indian Constitution
Indian ConstitutionTwitter

அப்படி கணக்கிட்டால் நேற்று பெரும்பான்மையாக இருந்த இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானும் யுவன் சங்கர் ராஜாவும் இன்று சிறுபான்மையினரா? ஐயா இளையராஜா பெரும்பான்மை, அவர் மகன் சிறுபான்மையினரா? இந்த வாதமே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பினால் சாதி வலுப்பெறாது. அதன் மூலம் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து சமநிலை ஏற்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com