மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது; அதிகாரிகளின் மன அழுத்தம் அதிகமாகியுள்ளது - சீமான்
சாலையோரக் கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
வாணியம்பாடியில் நேற்று உழவர்சந்தை அருகில் உள்ள சி.எல்.சாலை பகுதியில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிகளை மீறி கடை திறந்திருந்ததாகக் கூறி பழக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை சூறையாடினார். பழங்களை சாலையில் வீசி, தள்ளுவண்டிகளை தலைக்குப்புற கவிழ்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்திற்கு நகராட்சி ஆணையர் இன்று வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,
டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது.
கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு குறித்த வாணியம்பாடி ஆணையரின் வருத்தம் வெளிப்படுத்துகிறது.
எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கடைகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.