”வரும் மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்”- சீமான் தகவல்
மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தெரிவித்துள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றுக்கு ஆஜரான அவர், அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், இதை அவர் தெரிவித்தார்.
கடந்த 26.10.2016-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் டேங்க்பண்ட் ரோடு கேரளா சிப்ஸ் கடை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைவர் சீமான் மற்றும் அவரது தலைமையில் 200 நபர்கள் ஒன்று சேர்ந்து இலங்கையில் பல்கலை கழக மாணவர்களை இலங்கை காவல் துறையினர் சுட்டுக் கொன்றதை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் சீமான் உள்பட 200 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரிவு 143-ன் படி சட்டவிரோதமாக கூடுதல், பிரிவு 188-ன் படி அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராகாததால் கடந்த 15.12.21-ம் தேதி எழும்பூர் நீதிமன்றம் சீமான் மீது Non Bailable Warrant பிறப்பித்து வழக்கு விசாரணை வரும் 16.02.2022-ம் தேதி ஒத்தி வைத்தது. இந்நிலையில் இன்று Warrant Recall செய்ய சீமான் எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதி பாலசுப்பிரமணியன் வழக்கு விசாரணையை 16-2-2022 அன்று ஒத்தி வைத்தார். அன்று சீமான் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசுகையில், "2016-ம் ஆண்டு வழக்குக்காக ஆஜராகி உள்ளேன். அடுத்த மாதம் 16-ம்தேதி ஆஜராக வர சொல்லி உள்ளார்” என்று கூறிவிட்டு, தொடர்ந்து “திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு யார் பொறுப்பேற்க உள்ளார்? அரசு வீடு கட்டி கொடுக்கிறது என்றால் தரமாக இருக்க வேண்டும். ஏன் இங்கு மட்டும் கேவலமாக இருக்கிறது? அதேபோல விளைந்து கடைக்கு வரும்போது நெல் தரமாக இருக்கிறது. அதுவே ரேசன் கடைக்கு வரும் போது ஏன் நாறுகிறது? இடையில் என்ன நடக்கிறது?
மக்களை பற்றி அரசு கவலைப்படவில்லை என்பதே காரணம். கட்டிட விபத்து ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல். நாங்கள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் அதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாகையில் நடந்த கூட்டத்தில் பேச மேடை அமைக்கக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கோவையில் மாநாடு அளவுக்கு மக்களை திரட்டி பேசி உள்ளார். அதுவும் பொதுக்கூட்டம் தான். ஆனால் அதற்கு அனுமதி உள்ளது. அவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் அதிகாரத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆட்சியாளர்களின் அட்டகாசம் அது. ஆனால் உண்மையில் இந்த உரிமை எங்களுக்கும் உண்டு அல்லவா?
எதிர் கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என்றும், ஆளுங்கட்சியான பிறகு ‘வெல்கம் மோடி விருந்தாளி’ என்றும் சொல்கிறார் ஆர்எஸ் பாரதி. ஆட்சி அமைத்தப்பிறகு கூட்டாளி ஆகிறார்கள். மக்கள் ஏமாளியாக வேண்டியதுதான்.
எதிர் கட்சியாக இருக்கும் போது கருத்து சுதந்திரம் பேசுவது, ஆளுங்கட்சியான பிறகு கழுத்தை பிடித்து நெரிப்பது... இதே நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது. நீட் விவகாரத்தில் திமுக ஏமாற்றுகிறது. எதிர் கட்சியாக இருக்கும் போது திமுக போராடியது. ஆனால் இப்போது ஏகே ராஜன் குழு அறிக்கை கொடுத்ததற்கு பிறகும், எதுவும் நடக்கவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை தான்.
வரும் மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம்" என்றார் அவர்.
தொடர்புடைய செய்தி: மாநிலங்களுக்கு இதுவரை 149 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் - மத்திய அரசு