Seeman
Seemanpt desk

“இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும்; அதேசமயம் இடைத்தேர்தல் என்பதே கூடாது” - சீமான்

“காங்கிரஸ் கட்சி இனி இருக்கப் போவதில்லை. அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்ற நினைப்பில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவிற்கு சென்றிருக்கலாம்” என்று சீமான் தெரிவித்தார்.

செய்தியாளர் : லெனின்.சு

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதேசமயம் நான் போட்டியிடப் போவதில்லை” என்றார். அவர் பேசியவற்றின் முழு விவரம், இங்கே...

“தேர்தல் வரும்போது மட்டும் பாசம்...”

“தாத்தா, பாட்டி, அப்பா என ஆண்டாண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, திடீரென சாதி வாரி கணக்கெடுப்பு கோருவது எதற்காக? திடீரென அவருக்கு தமிழக மீனவர்கள் மீது பாசம் ஏற்படுவது எதற்காக? இத்தனை நாள் ராகுல் காந்தி என்ன கோமாவிலா இருந்தார்? தேர்தல் வரும்போது மட்டும் அனைவர் மீதும் அவருக்கு பாசம் வருகிறது என்றால் அவை அனைத்தும் ஒருவித நாடகம்தான்.

Rahul Gandhi
Rahul Gandhiகோப்புப்படம்

“இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார்”

“நாம் தமிழர் கட்சியில் சாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ்க் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதை செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார்”

“விஜயதரணி பாஜகவில் இதனால்தான் இணைந்திருப்பார்..”

“காங்கிரஸ் கட்சி இனி இருக்காது அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதரணி அங்கு சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு மூன்று முறை எம்.எல்.ஏ சீட் வழங்கியது. ஆனால், பாஜகவில் சேரும் போது மட்டும்தான் ஏதாவது செய்வார்கள். அதன் பின் எந்த செய்தியும் வராது”

“வாக்கு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா?”

“பாஜகவினர் ஒரு கையில் நோட்டுப் பெட்டியும், மற்றோரு கையில் வாக்குப் பெட்டியும் வைத்துள்ளார்கள். அதனால் அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ, அத்தனையும் வெல்வார்கள். வாக்கு இயந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால், அந்த நாடேவும் தேர்தலில் அதனை பயன்படுத்துவதில்லை.

evm machine
evm machinept web

நீட் தேர்வெழுத செல்லும் எம்மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்”

“இடைத்தேர்தல் என்பதே கூடாது. ஏனெனில்....”

“தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. உண்மையில் இடைத்தேர்தல் என்பதே தேவையில்லை. மக்கள் பணம் விரையமாவதை தடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரணம் அடைவது, தகுதி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட சமயங்களில், இடைத்தேர்தல் நடத்துவதை கைவிட வேண்டும்.

சீமான்
சீமான்

பொதுத்தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம் தாடி வளர்ப்பது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஒரு படத்தில் நடித்துவருகிறேன். அதற்காகதான் தாடி வைத்துள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com