`விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ - சீமான் பேச்சு

`விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ - சீமான் பேச்சு
`விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ - சீமான் பேச்சு

“நடித்தால் மட்டுமே நாடாள தகுதி உடையவர்களாக மாற முடியாது. இது நடிகர் விஜய்க்கும் பொருந்தும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் நாள் 2023 மற்றும் தமிழம் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளையும் அவர் அளித்த பதில்களையும் பார்க்கலாம்...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான்... “இது ஒரே நாடா என்று நான் கேள்வி கேட்டுள்ளேன். இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. இது ஒரே நாடா? ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை, ஒரே தேர்வு... இது எல்லாம் ஏற்புடையது அல்ல. தேச ஒற்றுமை என்ற பெயரில் தனித்தனி தேசமாக பிரிந்து செல்ல இவர்கள் வழி வகுக்கிறார்கள். பிரிவினை வாதத்தை தூண்டுகிறார்கள். `ஒரே மதத்திற்குள் வா’ என்று பிரிவினை வாதத்தை தூண்டுகிறார்கள் அதெல்லாம் ஏற்புடையதல்ல...

இதுவரை பாராளுமன்றத் தேர்தலை நான்கு கட்டமாக மத்திய அரசு நடத்தியது. சட்டமன்றத் தேர்தலை பிரித்து பிரித்து பல மாநிலங்களில் நடத்தியது. ஒரே நாளில் எப்படி அனைத்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவீர்கள்? ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்றால் நாட்டிற்கு என்ன நன்மை வரும்? இவங்ககிட்ட மாட்டிட்டு நாங்க படுற பாடு பெரிய கொடுமையாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழர்கள் நிலமற்றவர்களாக மாறிவிடுவார்கள். இந்த நிலத்தின் அரசியலை அவன் தீர்மானிப்பான் என்றால் நாம் அடிமையாக மாறிவிடுவோம். இது கண்முன் இலங்கையில் நடந்தது.

திராவிடன் எந்த மொழியை வைத்து நாட்டை ஆள்கிறான்? இது தேவையற்ற சேட்டை. `திராவிட நாடு திருநாடு’ என்கிற தமிழ் தாய் வாழ்த்து வரிகள் வருகிறது. அதனாலதான் மனோன்மணியம் சுந்தரனார் பாட்டை தூக்க வேண்டும். புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடியுள்ளான். அதுதான் புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.

திராவிடம் என்றால் அந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கே என்னவென்று தெரியாது. காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள். முதலமைச்சரே பேசுகிறார் என்றாலும் காசு கொடுத்தால் தான் கூட்டம் வரும். `பேஸ்ட்ல உப்பு இருக்கு’ என்று சொல்வார்களே சமந்தா ஒரு மாடல், ரம்மி விளையாடுவது ஒரு மாடல், இந்த கட்டுக் கம்பிக்கு வருவாரே ஒருவர்... அதுவொரு மாடல்! அதுபோல தான் திராவிடம் என்பதும் ஒரு மாடல்” என்றார்.

`நடித்தால் மட்டுமே நாடாக தகுதி வந்து விடுகிறதா?’ என்று கேள்வி எழுப்பிய சீமான், “நடிகர்கள் நடிப்பது மட்டுமே போதுமா? நேரடியா கேரவனில் இருந்து கோட்டைக்கு தான் போவேன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த கருத்து அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். விஜய் அரசியலுக்கு வந்தாலும் இந்த கருத்து பொருந்தும். நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. ரசிகர் மன்றம் வைத்து ரசிகர்களை மாவட்ட செயலாளராக்கி அதிலிருந்து நான் வரவில்லை. நான் மக்களை சந்தித்தேன். மக்களிடம் கருத்துகளை எடுத்து வைத்து படையை திரட்டினோம்.

சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அது பட்டயம் கிடையாது. கல்வெட்டு எழுத்து கிடையாது. அந்தந்த காலத்தில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக வருவார்கள். அப்போது தியாகராஜ பாகவதர் இருந்தார். அதன் பின்பு எம்ஜிஆர் வந்தார். அதற்கு பின்பு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வந்தார். இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நின்றுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சரத்குமார் சொல்லியது சரிதான். அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

விஜய்யின் படத்தை தான் பெண்கள் குழந்தைகள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். எதார்த்தத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடியவில்லை? என்ன பிரச்னை உள்ளது? உங்களுக்கு அவர்தான் உயர்ந்த நிலையில் உள்ளார். ரஜினிகாந்த் கிட்டே கேட்டாலும், அவரும் இதைதான் சொல்லுவார். அவரே ஒத்துக் கொண்டு விட்டார்” என்றார்.

2026 ஆம் ஆண்டு விஜய் கட்சி தொடங்கினால் நீங்கள் சேர்ந்து போட்டி விடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்... “கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அது அன்னைக்கு யோசிக்க வேண்டிய விஷயம். கற்பனையில் அவரிடம் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. கார்த்தி, சூர்யா, சிலம்பரசன் உள்ளிட்டோர்க்கு பிரச்னை வரும் போது நான் பேசியுள்ளேன். விஜய்யை கூட்டணியாக பார்க்க முடியாது. அது அவர்கள் முடிவு பண்ண வேண்டிய விஷயம். தனித்துப் போட்டியிடவே நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பின்பு கொள்கையை முன் வைக்க வேண்டும். அதற்குப் பின்பு ஒத்த கருத்து இருந்தால் இணைந்து பயணிக்கலாம்” என்றார்.

மத்திய பட்ஜெட் குறித்து பேசுகையில், “மத்திய நிதி அமைச்சரின் சீதாராமனின் கணவர் அதிகமாக காசு வாங்குவார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதுக்கு மேல் மக்களிடம் மதிப்பு கூட என்ன உள்ளது? அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் வரி போட்டு விட்டீர்கள்” என்றும், ஆளுநர் குறித்து பேசுகையில், “ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது அல்ல. ஆளுநர் பதவியையே திரும்பப் பெற வேண்டும். அதுதான் நாம் தமிழரின் நிலைப்பாடு” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com