
புதுச்சேரி, மரப்பாலம் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருநெல்வேலியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக என்னிடம் தெரிவித்ததார்.
அவர் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். ஆக கடந்த கால எடப்பாடி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது. ஆனால், உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கில் அவர் பதவி விலகி இருக்க வேண்டும்.
அதேபோல் கள்ளச்சாராய விவகாரத்தில் தற்போது அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தை மக்கள் ஆழ்ந்து கவனித்து வருகின்றனர். இந்த ஆட்சி வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமா, அல்லது இப்போதே அகற்றப்பட வேண்டுமா என்பதையெல்லாம் மக்கள் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், “அந்நிய முதலீடுகள் ஆபத்தானது. அந்நிய முதலீடு வந்து என்ன செய்ய போகிறார்கள்? சிப்காட்டில் என்ன தொழிற்சாலை உள்ளது.? அதில், யார் வேலை செய்கிறார்கள்? ஆகவே அதில் பயன் இல்லை. முதல்வர் வெளிநாடு போனதற்கு, வெளிநாடுகளை சுற்றிப் பார்த்து விட்டாவது வரட்டும்.
நாட்டிலேயே தாய் மொழியில் குறைவான தேர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தாய்மொழியில் கல்வி கற்காமல் உயர் கல்வி படித்து வேலைக்கு போக முடியும் என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி உருவாக்கியுள்ளது.
2,000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தால் ஊழல், லஞ்சம், தீவிரவாதம் அழிந்துவிடும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், அவை எதுவும் நடக்கவில்லை” என கடுமையாக பேசினார். தொடர்ந்து விஷச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்ச இழப்பீடு வழங்கப்பட்டதற்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.